Samstag, 28. März 2015

வரலாறு

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே
ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.
சிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.
மாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்பதற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.
தொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
இவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
பர்வதவர்த்தினி சமேதரராக எழுந்தருளி இராமலிங்கேஸவரப்பெருமான் புங்குடுதீவு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.புலம்பெயர்  தமிழர்களால் இந்த ஆலயத்தின் திருப்பணி வேலைகள் அவ்வப்போது  நடைபெற்று வருகின்றன அன்னதான மடம் கோவில் பல கட்டுமானங்கள் தேர்முட்டி சித்திரத்தேர் என்பனவும் நிறைவுற்று உள்ளன  தற்போது  ஏழு  வாசல் கொண்ட சிற்ப ராஜகோபுரம் ஒன்றினை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் ஐரோப்பிய கனடா தேசமெங்கும் இதற்கென அமைப்புகளும் நிறுவப்படுள்ளன இவை பற்றிய மேலதிக விபரங்கள் இன்னொமோர் கட்டுரையில் உள்வாங்கப்படுள்ளன . புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தின் திருவிழா காலங்களில் தாயகம் சென்று பாணாவிடை சிவனை தரிசித்து செல்கின்றனர் அத்தோடு கோவில் நிறமான பணிகளை பார்வையிட்டு மேலும் செய்ய வேண்டிய கருமங்களை ஆவன செய்ய வழி  கோலுகின்றனர் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen